இராவண காவியம்
இராவணகாவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
இந்நூலின் ஆசிரியர் 1906 ஆம் ஆண்டில் முத்துசாமிக் கவுண்டருக்கும் சின்னம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இயற்கையாகவே இளமையிலேயே கவி பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றினார். தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விதவை மணம் கலப்பு மணம் சீர்த்திருத்த மணம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார். வேளாண் வேதம் என்னும் மாத இதழை நடத்தினார்.
தாய்மொழிப்படலம்
பாடல் - 1
ஏடுகை யில்லார் இல்லை இயலிசை கல்லார் இல்லை
பாடுகை யில்லார் இல்லை பள்ளியோ செல்லா ரில்லை
ஆடுகை யில்லார் இல்லை அதன்பயன் கொள்ளார் இல்லை
நாடுகை யில்லார் இல்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.
விளக்கம்
இராவணனின் இலங்கை சிறப்புகள் பல பொருந்திய நாடு. கல்வி கேள்விகளால் அறிவு பெற்ற மக்கள் நிரம்பிய நாடு அந்நாட்டில் கல்வி பயிலும் ஏடுகள் இல்லாமல் ஒருவரையும் பார்க்க இயலாது. இயல் இசை கற்காதவர் அந்த நாட்டில் இல்லை. தமிழிசையைப் பாடி மகிழாதவர் இல்லை. கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வியறிவு பெறாதவர்கள் இல்லை. தமிழிசையைப் போற்றி ஆடல் தொழிலை மேற்கொள்ளாதவரும் இல்லை. இயல் இசை, நாடகம் என்ற முத்தமிழின் பயனை அடையாதவர்கள் இல்லை. நற்றமிழின் வளர்ச்சியை விரும்பாதவர்களும் இல்லை என்று அந்நாட்டின் சிறப்பு கூறப்படுகின்றது.
பாடல் -2
தமிழெனது ருகட் பார்வை தமிழெனது உருவப் போர்வைதமிழெனது உயிரின் காப்புத் தமிழெனது உளவே மாப்புத்தமிழெனது உடைமைப் பெட்டி தமிழெனது உயர்வுப் பட்டிதமிழெனது உரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.
விளக்கம்
அந்நாட்டு மக்கள் தமிழைத் தங்கள் உயிராக மதித்தனர். தமிழ் தங்களின் இரு கண்களில் இருந்து வருகின்ற பார்வை என்றும், மானத்தைக் காக்கின்ற போர்வை என்றும், உயிரைக் காக்கும் கருவி என்றும், உள்ளத்தின் சிந்தனை என்றும், செல்வங்கள் பொதிந்திருக்கின்ற பெட்டி என்றும், உயர்வின் உறைவிடம் என்றும், மதித்து தமிழைப் போற்றி வாழ்ந்தனர்.
பாடல் - 3
நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்பாடெலாந் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமிழ் அகத்து மாதோ.
விளக்கம்
அந்நாட்டில் புலவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். நகர் முழுவதும் பள்ளிக்கூடங்கள் காணப்பட்டன. வீடுகள் யாவும் தமிழ்த்தாய் உறைகின்ற கோயில்களாகக் காட்சியளித்தன. கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் தமிழின் மேன்மைகள் ஓங்கின. வயல்வெளிகளிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. தமிழ்க் கூத்துகள் மக்களை மகிழ்வித்தன. திரும்பிய திசையெல்லாம் தமிழ்ச்சொற்கள் ஒலித்தன. வண்டமிழ்ச் சிறப்பினை அறிந்த மக்கள் நிரம்பிய நாடாகக் காட்சியளித்தது.
பாடல் -4
உண்டியை உண்ணார் பொன்பட் டுடையினை எண்ணார் கன்னற்கண்டினைப் பேணார் செம்பொற் கலன்களைப் பூணார் வண்ணச்செண்டினைச் சூடார் சாந்தத் திரளினை நாடார் யாழின்தண்டினைத் தீண்டார் யாருந் தமிழ்மொழி பயிலாக் காலே.
விளக்கம்
தமிழ் மொழியைப் பயிலாத நாட்களில் அங்குள்ள மக்கள் யாரும் உணவை உண்பதில்லை. பொன் பட்டாடைகளை உடுத்துவதில்லை. கரும்பு கற்கண்டுச் சுவையினை எண்ணுவதில்லை. செம்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைப் பயன்படுத்துவதில்லை. வண்ணப் பூக்களைச் சூடுவதில்லை. நறுமணம் வீசும் சாந்தத்தைப் பயன்படுத்துவதில்லை. யாழின் நரம்புகளை மீட்டுவதில்லை.
பாடல் - 5
பாடுபவ ருக்கும் உரை பண்ணுபவ ருக்கும்ஏடதுவி ரித்துஉரை யிசைப்பவர் தமக்கும்நாடுநக ரோடு அவர் நயப்பவை கொடுத்தும்தேடிவரு வித்துமுயர் செந்தமிழ் வளர்த்தார்.
விளக்கம்
தமிழைப் பாடுபவர்களுக்கு தமிழில் உரையாற்றுபவர்களுக்குகு, நூலைப் படித்து உரை செய்கின்றவர்களுக்கு நாடுநகரத்தோடு அவர் விரும்பிய பொருட்களைக் கொடுத்து அவர்களைத் தங்கள் நாட்டிற்கு வரவழைத்து செந்தமிழ் வளர்த்தனர் அம்மக்கள்.
0 Comments