Ad Code

If you need any help please contact us via WhatsApp!

உருபு புணரியல்

உருபு புணரியல்

வேற்றுமை உருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும் இயல்பினைக் கூறுவதால் இவ்வியல் உருபு புணரியல் என அழைக்கப் பெறுகிறது. இதன்கண் அமைந்த நூற்பாக்கள் 18.

உருபுகள்

வேற்றுமை உருபுகளும் அவை சார்தற்கு உரிய இடங்களும்
ஒருவன் ஒருத்தி பலர்ஒன்று பலஎன
வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே.

ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன இருதிணைக்கும் உரிய ஐம்பாற் பெயர்களாகும். இவற்றுடன் எழுவாய் வேற்றுமை முதலாக விளி ஈறாக நின்ற எட்டு உருபினையும் உறழ வேற்றுமை உருபுகள் நாற்பதாம்.

(எ.டு)

நம்பி, சாத்தி, மக்கள், மரம், மரங்கள்.
    நம்பி (எழுவாய்), நம்பியை, நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பியது, நம்பிகண், நம்பியே

வேற்றுமை உருபுகள் நிற்கும் இடம்

பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே.

வேற்றுமை உருபுகள் தம்பொருளைக் கொடுக்கப் பெயருக்குப் பின்னர் வரும்.

(எ.டு)

நம்பி + பெற்றான் - நம்பி பெற்றான் (எழுவாய்)
நம்பி + ஐ + பெற்றான் நம்பியைப் பெற்றான் (2 ஆம் வேற்றுமை)
நம்பி + ஆல் + பெற்றான் - நம்பியால் பெற்றான் (3ஆம் வேற்றுமை)

தம்பொருள் தரவருவன எழுவாய் முதலிய எட்டு உருபுகளுள், பெயர் முழுவதும் உருபாய் நிற்கும் எழுவாயைத் தவிர எஞ்சிய ஏழும் பெயரின் வழி வருவன.

வேற்றுமை உருபுகள் மொழிகளுடன் புணர்தல்
ஒற்றுஉயிர் முதலஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே.

வேற்றுமை உருபுகள் வெளிப்பட்டு நின்று நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும். அவ்வாறு புணரும் மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய ஐ முதலிய ஆறு வேற்றுமை உருபுகளும் இடைச்சொல்லாகும். புணர்ச்சியில் மெய்யையும் உயிரையும் (முன் இயல்களில்) இறுதியாகக் கொண்ட பெயர்களின் புணர்ச்சி விதிகளைப் பெரும்பான்மை ஒத்து நிற்கும். சிறுபான்மை ஒவ்வாது.

நம்பி + கண் + வாழ்வு நம்பிகண் வாழ்வு என்பதில் நம்பி இகர ஈற்றுப் பெயர் பெயர். இதன்முன் வேற்றுமை உருபாகிய கண் புணர்த்து 'ஆவியரமுன் வன்மை மிகா' (நூ. 159) என்னும் விதிப்படி நம்பிகண் என இயல்பாயிற்று. கண்+வாழ்வு என்பது 'ணன வல்லினம் வர டறவும் பிறவரின் இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு" (நூ.209) என்னும் விதிப்படி கண்வாழ்வு என இயல்பாயிற்று. உறிக்கண் தயிர் என்பதில் உறி + கண் என்பன 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' (நூ.165) என்னும் விதிப்படி உறிக்கண் என வல்லெழுத்து மிக்கது. கண் + தயிர் என்பன ணனமுன் வல்லினம் வர டறவும் என்னும் விதிப்படி கண் உருபின் முதலும் ஈறும் கட்டயிர் என விகாரமெய்தியது. மேலும்,

பழி+கு+அஞ்சி பழிக்கு+அஞ்சி -பழிக்கஞ்சி
நம்பி+கு-பிள்ளை-நம்பிக்கு+பிள்ளை-நம்பிக்குப்பிள்ளை என அமைத்து ஏற்ற விதி கூறி முடித்துக் கொள்க.

சாரியை

வேறாகி நிற்கும் இருமொழிகள் தம்முள் சார்தற் பொருட்டு இயைந்து நிற்கும் எழுத்தோ மொழியோ சாரியை என்று பெயர்பெறும். இவை சார்ந்து வருட மொழிப்பொருட்டு உபகாரமாய் நிற்கும். மொழியைச் சார்ந்து நிற்கும் இம்மொழி சாரியைகள், பொதுச்சாரியை என்றும் கூறப்பெறும், இச்சாரியை வரும் முறைகளையும் சாரியை இவை என்பதையும் நன்னூலார் மிகச்சிறப்பித்து விளக்குகிறார்.

சாரியை வரும் முறை

பதமுன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்.

ஒரு பதத்தின்முன் விகுதியோ பதமோ உருபோ புணரும். அவ்விடத்துச் சாரியை ஒன்றேனும் பலவேனும் வரும். வராது ஒழிதலும் ஆகிய இவ்விரு விகற்பத்தைட் பெறுதலும் உண்டு.

(எ.டு)

விகுதிப்புணர்ச்சி

நடந்தவன் -நட +த் + த் + அன் + அன் அன்சாரியை வந்தது
நடந்தான் நட + த் + த் + ஆன் சாரியை வரவில்லை

பதப்புணர்ச்சி

புளியங்காய் - புளி + அம் + காய் அம் சாரியை வந்தது
புளிக்கறி புளி + கறி சாரியை வரவில்லை
நெற்குப்பை நெல் + குப்பை சாரியை வரவில்லை
நெல்லின்குப்பை-  நெல் + இன் + குப்பை -இன் சாரியை வந்தது.

உருபு புணர்ச்சி

மரத்தை -மரம் + அத்து + ஐ - அத்துச் சாரியை வந்தது
தன்னை தான் + ஐ -சாரியை இல்லை
பல சாரியை பெறுதல்
மரத்தினுக்கு -மரம் + அத்து + இன் + உ+கு (அத்து, இன், உ)

சாரியைகள்

அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகுன
இன்ன பிறவும் பொதுச்சாரி யையே.

அன் முதலாக ன ஈறாகியவும் பிறவும் விகுதி, பதம், உருபு என்னும் மூன்று புணர்ச்சிக்கண்ணும் தனிமொழிக்கண்ணும் வருகின்ற பொதுச் சாரியை ஆவனவாம். (எ-டு)

ஒன்றன்கூட்டம் அன்; ஒருபாற்கு ஆன்
வண்டின்கால் -இன்; தொடையல் -அல்
பலவற்றை - அற்று; பதிற்றுப்பத்து -இற்று
மரத்திலை - அத்து; மன்றம் - அம்
எல்லார் தம்மையும் - தம்; எல்லார் நம்மையும் - நம்
எல்லீர் நும்மையும் நும்; கலனே தூணி - ஏ
நடந்தது - அ;    சாத்தனுக்கு - உ
ஏற்றை -ஐ; உய்குவை-கு;    ஆன்- ன்

இன்னபிற என்றதனால்

அவன்தனை தன்;    அவன்தான் -தான்.
அவர்தாம் தாம்;    புற்றாஞ்சோறு ஆம்;    இல்லாப்பொருள் -ஆ

என்பனவும் சாரியைகளாகும்.

எல்லாம் என்பதற்கு உரிய சிறப்பு விதி

எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்றொடு உருபின் மேல்உம் உறுமே
அன்றேல் நம்மிடை அடைந்துஅற் றாகும்.

எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர் அஃறிணையைக் குறிக்கும் சொல்லாக நின்று உருபுகளுடன் புணரும்போது அற்றுச்சாரியை பெறுவதோடு ஈற்றில் முற்றும்மையையும் பெறும். உயர்திணையைக் குறிக்கும் போது நம்முச் சாரியையும் முற்றும்மையையும் பெறும்.

(எ.டு)

எல்லாம் + அற்று + ஐ + உம் எல்லாவற்றையும் (அஃறிணை)
எல்லாம் + நம் + ஐ + உம் எல்லா நம்மையும் (உயர்திணை)

தாம். நாம், நீர் என்னும் மூவிடப்பெயர் தம், நம், நும் என விகாரப்பட்டு மூவிடப் பெயர்களைச் சார்ந்து நின்று சிறப்புப் பொருள் தாராமையின் இம்மூன்றும் சாரியை இடைச்சொல் எனப்பட்டன. இவற்றுள் தம் படர்க்கைப் பெயருக்கும் நும் முன்னிலைப் பெயர்க்கும் நம் தன்மைப் பெயர்க்குமாய் அமைந்தன.

எல்லாரும் எல்லீரும் சொற்களின் புணர்ச்சி

எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை.
தள்ளி நிரலே தம்நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே.

எல்லாரும் என்னும் உயர்திணைப் படர்க்கைப் பெயரொடும் எல்லீரும் என்னும் முன்னிலைப் பொதுப் பெயரொடும் ஆறு உருபும் புணரும். அவ்விடத்து இரு பெயர்களின் முற்றும்மைகள் நீங்கும். படர்க்கைப் பெயர்க்குத் தம்முச் சாரியையும் முன்னிலைப் பெயர்க்கு நும்முச் சாரியையும் பொருந்தும். அந்நிலையில் நீக்கப்பட்ட முற்றும்மைகள் உருபுகளின் பின்வந்து பொருந்தும்.

(எ.டு)

எல்லாரும் + தம் எல்லார் (உம்) தம் + ஐ + உம் எல்லார் தன்மையும்
எல்லீரும் + நும் - எல்லீர் (உம்) + நும் + ஐ + உம் எல்லீர் நும்மையும்
எல்லாரும் + ஐ + உம் - எல்லாரையும் (தம் சாரியை இல்லை)
எல்லீரும் + ஐ + உம் - எல்லீரையும் (நும் சாரியை இல்லை)
நம் + தம் + ஐ நந்தம்மை; எம் + தம் + ஐ எந்தம்மை எனப் படர்க்கைக்கு
உரிய தம்முச் சாரியை தன்மை, முன்னிலைக்கு வருதல் இடவழுவமைதியாகும்.

நெடுமுதற் குறுகும் சொற்களின் புணர்ச்சி

தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம்
நீநீர் என்எம் நின்நும் ஆம்பிற
குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டல.

இருதிணைப் பொதுவாய மூவிடப் பெயர்கள் தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்பனவாகும். இவற்றுள் தான், தாம். நாம் என்பனவற்றோடு உருபுவரின் தன், தம், நம் எனக் குறுகும். யான், யாம், நீ, நீர் என்பவை குறுகுவதோடு என், எம். நின், நும் எனத் திரிந்து உருபொடு புணரும்.இவ் ஏழு சொற்களும் கு என்னும் நான்காம் வேற்றுமை உருபுடன் புணரும் போது இடையில் அகரச் சாரியை வரும். அகரச் சாரியை பெறும் குவ்வுருபும் ஆறாம் வேற்றுமையும் இச்சொற்களின் முன் வரின் ஒற்று இரட்டுவதில்லை.

(எ.டு)

1. தான் + ஐ தன் + ஐ -தன்னை; தாம் + ஐ - தம்மை; நாம் + ஐ - நம்மை
2. யான் + ஐ என்னை; யாம் + ஐ எம்மை; நீ + ஐ - நின் + ஐ -நின்னை
3. தாம் + கு -தம் + கு தம் + அ + கு -தமக்கு
4. தாம் + அது தம் + அது -தம + து தமது

கு, அது என்பவை புணரத் தனிக்குறில் முன் ஒற்று இரட்டிக்கும் என்னும் விதிப்படி தம்மக்கு, தம்மது என மாற வேண்டும். அவ்வாறு வழக்கு இல்லாமையால் ஒற்று இரட்டாது நின்றனவாம்.

பிற என மிகுத்துச் சொல்லியதால் நீ என்பது உன் எனவும் நீர் என்பது உம் எனவும் திரிந்து, உன்னை, உம்மை என உருபேற்கும். நீர் என்பது நீம் ஆகிக் கள் விகுதி பெற்று நீங்கள் எனத் தற்காலத்து வழங்கப் பெறுகிறது.

ஓரெழுத்து ஒருமொழிகளின் புணர்ச்சி

ஆமா கோனவ் அணையவும் பெறுமே

பசுவை உணர்த்தும் ஆ என்னும் பெயரும் விலங்கை உணர்த்தும் மா என்னும் பொதுப்பெயரும், இறைவனை உணர்த்தும் கோ என்னும் பெயரும் உருபுகளோடு புணருமிடந்து னகரச் சரியை பொருத்தவும் பெறும்

(எ.டு)

ஆ+ஐ ஆன் + ஐ ஆனை, மானை: கோனை என னகரச் சாரியை பெற்று வந்தன
னகரச் சாரியை பொருத்தவும் பெறும் என்பதால் பொருந்தாமையும் உண்டு
ஆ + ஐ - ஆவை; மாவை; கோவை.

அணையவும் என்பதை எதிரது தழீஇய எச்சவும்மையாகக் கொண்டு பிறவாறும் கொள்ளலாம்.

உகரச்சாரியை பெற்று ஆவுக்கு, மாவுக்கு, கோவுக்கு என அமையும். உகரம், இன் சாரியை பெற்று ஆவினுக்கு, கோவினுக்கு என அமையும். இன் உருபு நீங்கப் பிறவற்றோடு இன் சாரியை மட்டும் பொருந்த ஆவினை, கோவினை, மாவினை என அமையும்.

எண்ணுப் பெயருடன் உருபுகள் புணர்தல்

ஒன்று முதல்எட்டு ஈறாம் எண்ணூர்
பத்தின்முன் ஆன்வரின் பவ்வொற்று ஒழியமேல்
எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே.

ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்களோடு புணர்ந்த பத்து என்னும் எண் முன்னர் உருபுகள் புணருமிடத்து ஆன் சாரியை வந்து புணரும். அவ்விடத்துப் பத்து என்னும் எண்ணினது பகர ஒற்று மட்டுமே நிற்க மேல் நின்ற எல்லா எழுத்தும் கெடும். ஒன்பது என்னும் எண் முன்னரும் உருபுகள் புணருமிடத்து ஆன் சாரியை வரின் அதன் பகரவொற்று நிற்க மேல்நின்ற எல்லா எழுத்தும் கெடும்.

(எ.டு)

ஒன்று + பத்து + ஐ - ஒரு + பத்து + ஆன் + ஐ
ஒரு + ப் + ஆன் + ஐ ஒரு பானை
ஒன்பது + ஐ ஒன்ப் + ஆன் + ஐ - ஒன்பானை
ஒன்பஃது + ஐ ஒன்ப் + ஆன் + ஐ -ஒன்பானை

பது, பஃது என்பவற்றில் முறையே அது, அஃது என்பன கெட்டன.

வகர ஈற்றுக்குச் சிறப்பு விதி

வவ்விறு சுட்டிற்கு அற்றுஉறல் வழியே.

அஃறிணைப் பன்மைப்பால் உணர்த்தும் வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் மூன்றும் உருபுகளோடு புணருமிடத்து அற்றுச் சாரியை பெறும்.

(எ-டு)

அவ் + ஐ அவ் + அற்று + ஐ அவற்றை
இவ் + ஐ இவ் + அற்று + ஐ -இவற்றை
உவ் + ஐ - உவ் + அற்று + ஐ -உவற்றை

வழி என்னும் மிகையால் அற்றும் இன்னும் ஒருங்கு வருதலும் அமையும்.

அவ்+அற்று+ இன்+ஐ அவற்றினை, இவற்றினை, உவற்றினை

இச்சாரியை புணர்ச்சியில் அவ்+அற்று என்பதில் தனிக்குறில் முன் ஒற்று இரட்டா.

அஃது என்பதற்குச் சிறப்புவிதி

சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே.

அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப் பெயர்களின் முன் அன் சாரியை வந்து புணர நிலைமொழியின் இடைநிற்கும் ஆய்தம் கெடும்.

(எ-டு)

அஃது + அன் + ஐ அது + அன் + ஐ அதனை; இதனை; உதனை 
அஃது + ஐ அஃதை; அது + ஐ - அதை

சாரியை வர ஆய்தம் கெடும். வாராவழி இயல்பாகப் புணரும்.

அன் வருதலை வற்புறுத்திக் கூறாமையால் நான்காம் வேற்றுமை உருபு புணர்வழி அதனுக்கு என உகரச் சாரியை வரும்.

அத்துச்சாரியை புணர்தல்

அத்தின் அகரம் அகரமுனை இல்லை.

அத்துச் சாரியையின் அகர உயிர் இயல்பினும் விதியினும் நின்ற அகர உயிரீற்றின் முன் வரின் வகர உடம்படுமெய் பெறாது கெடும்.

(எ-டு)

மக + அத்து + கை மகத்துக்கை (இயல்பீறு)
மர(ம்) + அத்து + கிளை - மரத்துக்கிளை (விதியீறு)

சாரியைக்குப் புறனடை

இதற்குஇது சாரியை எனின்அளவு இன்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்துஇடை
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே.

விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இதற்கு இது சாரியை என்று தனித்தனியாகச் சொல்லப் புகுந்தால் அதற்கு வரையறை இல்லை. ஆதலால் விகுதிப்புணர்ச்சி பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி ஆகிவற்றைக் கண்டு அவற்றைப் பிரித்துப் பார்க்க இடை நிற்கும் ஏ. அ போன்ற எழுத்துச் சாரியையும் அன், ஆன் போன்ற பதச்சாரியையும் இவ்விருவகை சாரியை தோன்றா இயல்பினையும் பொருந்துமாறு அறிவித்தல் பெரியோரது நெறியாகும்.

(எ.டு)

ஆ + மணி ஆனமணி - ஆ என்பதன் முன் ன் சாரியையோடு 'அ'கரச் சாரியையும் உடன் நின்றன.
பாட்டு + பொருள் பாட்டின் பொருள் பாட்டு என்னும் வன்தொடர் குற்றியலுகரம் இன் சாரியை பெற்றது.
மரம் + இலை - மரத்திலை - மகர ஈற்றுக்கு அத்தும் சாரியை ஆயிற்று
தன் + கை - தன்கை; என் + கை என்கை; சாரியை பெறாது இயல்பாயின.

நான்கு வகைப் புணர்ச்சிக்கும் புறனடை

விகுதி பதம்சா ரியைஉருபு அனைத்தினும்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே.

விகுதி, பதம், சாரியை, உருபு என்னும் நால்வகைப் புணர்ச்சிக் கண்ணும் விதிகள் பொதுப்படக் கூறப்பட்டன. அவற்றுள் இவ்விதி இதற்குப் பொருந்தி வராது என ஆராய்ந்து பார்த்து எவ்விதி எதற்குப் பொருந்தி வருமோ அவ்விதியை அதற்குக் கொள்ளல் வேண்டும்.

(எ.டு)

விகுதிப் புணர்ச்சியுள் 'றவ்வொடு உகர உம்மை நிகழ்பல்ல' (நூ.145) எனக் கூறியது பொதுவிதி. ஆயினும் சென்று இறந்த காலமும் சேறு நிகழ்காலமும் பொருந்துமென அமைத்துக் கொள்ள வேண்டும்.

பதப்புணர்ச்சியுள் ‘அல்வழி ஐ அம் முன்னராயின் இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும்' (நூ. 176) எனப் பொதுப்படக் கூறப்பட்ட விதி. ஆயினும் ஆடி திங்கள். குவளைகண் என இயல்பாகக் கொள்ளக்கூடாது. ஆடித்திங்கள் குவளைக்கண் என வல்லெழுத்து மிக வேண்டும்.

சாரியை புணர்ச்சியுள் உருபு புணர்வுழிச் சாரியை வருதல் வலியுறுத்தப்பட்டது (நூ.242). ஆயினும் இப்பொது விதி நாட்டினின் நீங்கினான் என்பதற்குப் பொருந்தாது. நாட்டின் நீங்கினான் என்பதே பொருந்துவதாகும்.

உருபு புணர்ச்சியுள் 'ஒற்றுயிர் புணர்ப்பே' (நூ.242) என்னும் பொது விதியைக் கொண்டு நம்பி + கு நம்பிகு என உயர்திணைப் பெயர் முன் வந்த கு உருபு மிகாது எனக் கொள்ளாமல் நம்பிக்கு என மிகுத்தும் நம்பிகண் என மிகாதும் கொள்வதே பொருந்துவதாகும்.

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதி

இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்
உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவும் ஆகும் ஐஉருபே.

வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறப்பட்ட பொது விதியிலிருந்து மாறி இயல்பிடத்து விகாரம் அடைதல், விகாரம் அடைய வேண்டிய இடத்து இயல்பாதல். உயர்திணைப் பெயரிடத்து வெளிப்பட்டும் மறைந்தும் உறழ்ச்சி முடிவைப் பெறுதல். அஃறிணைப் பெயரிடத்தும் உறழ்ச்சி முடிவைப்பெற்று நிற்றல் ஆகிய இவற்றுடன் இவைபோன்ற பிற வேறுபாடாயும் வரும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி.

(எ.டு)

தலைவன் + புகழ்ந்தான் இச்சொற்கள் தலைவன் புகழ்ந்தான் என இயல்பாதல் வேண்டும். ஆனால் தலைவற் புகழ்ந்தான் என விகாரப்பட்டு வரும்.

தமிழ் + படித்தான் இச்சொற்கள் தமிழ்ப் படித்தான் என விகாரப்பட வேண்டும். ஆனால் தமிழ் படித்தான் என இயல்பாக வரும்.

நம்பி + கொணர்ந்தான் இச்சொற்கள் உயர்திணைப் பெயருக்கு உரிய விதிப்படி நம்பி கொணர்ந்தான் 61601 உருபு மறைந்து வரவேண்டும். ஆனால் நம்பியைக் கொணர்ந்தான் என உருபு விரிந்து வரும்.

மகன் + பெற்றான் இச்சொற்கள் உயர்திணைப் பெயருக்கு உரிய விதிப்படி மகனைப் பெற்றான் என உருபு விரிந்து வர வேண்டும். ஆனால் மகற் பெற்றான் என உருபு மறைந்து வரும்.

மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதி

புள்ளியும் உயிரும் ஆஇறு சொல்முன்
தம்மின் ஆகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும்.

மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியுள் உயிரீறு, மெய்யீறுகளின் முன் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருத்தாவின் பொருளால் அமைந்த தம்மினாகிய தொழிற்சொல் வந்தால் வல்லினம் பொதுவிதியால் மிக்கு முடிதலே அன்றி உறழ்ந்தும் இயல்பாயும் முடியும்.

(எ.டு)

பேய் கோட்பட்டான்; பேய்க்கோட்பட்டான் (மெய்யிறுதி)
புலிகோட்பட்டான்; புலிக்கோட்பட்டான் (உயிரிறுதி) -இவை உறழ்ந்து வந்தன.
பேய்பிடிக்கப்பட்டான்; புலிகடிக்கப்பட்டான்; (இயல்பு)
கோள் கொள்ளுதல் தன் தொழில் (கருத்தாவின் தொழில்)
கொள்ளப்படுதல் (கோட்படுதல்) தம்மினாகிய தொழிற்சொல்.

எழுத்ததிகாரத்துக்குப் புறனடை

இதற்குஇது முடிபு என்று எஞ்சாது யாவும்
விதிப்புஅளவு இன்மையின் விதித்தவற்று இயலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.

இதற்கு இது முடிபாகும் என்று குறையாமல் இந்த எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டன. அவற்றைத் தனித்தனியே வரையறுத்துச் சொல்ல முற்பட்டால் அவை எல்லையின்றிப் பெருகும். ஆகையால் விதித்தனவற்றின் இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு விதி கூறப்படாதவற்றையும் கருதி ஆராய்ந்து விதி உரைத்துக் கொள்ள வேண்டும்

(எ.டு)

  1. மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து (நூ. 58) எனக் கூறப்பட்டது. கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புலனாகிய ஒலியை அறிவதற்கு இடும் உருவாம் வடிவெழுத்தே எனப் பிறர் கூறியவாறு ஒலி வடிவைப் புலப்படுத்துவதற்கு ஒரு கருவியாக எழுதிக் கொள்ளப்பட்டது வரிவடிவம் என அறிதல் வேண்டும்.
  2. ஆள் விகுதி (நூ. 140) பெண்பாலுக்குரியது. பெருமாள் என்பது பெருமையை உடையவன் எனப் பொருள் தரும். பெருமான் என்னும் சொல்லின் திரிபாகும். இதன்வழி ஆன் விகுதி சில இடங்களில் திரிந்து ஆண்பாலை உணர்த்தியதாகக் கொள்ள வேண்டும்.
  3. ணன வல்லினம் வரட்டறவும் என்றவிடத்து ட் மிகுத்துக் கூறப்பட்டது. டகரம் வல்லினம் ஆதலின் இயல்பினும் விதியினும் என்னும் விதிப்படி (நூ.165) மிகுந்ததாகக் கொள்ள வேண்டும்.

நும்தம் எம்நம் ஈறாம் மவ்வரு ஞநவே (நூ.211) என்னும் சொற்களைப் போல அம் என்னும் குற்றொற்றின் முன் மெல்லினம் வரின் அதுவாய்த் திரிந்ததாய்க் கொள்ள வேண்டும். அம் + நலம் அந்நலம் (அழகினது நலம்).

வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்க்கு அற்றுச் சாரியை (ந. 250) அதுபோல எவ் என்னும் வினாவும் வற்றுச் சாரியை பொருந்த எவற்றை என அமைக்க வேண்டும்.

2 ஆம் 3 ஆம் வேற்றுமைகளுக்குப் புறனடை உரைக்கப்பட்டது. ஏழாம் வேற்றுமை மண் புகுந்தும் விண்பறந்தும் எனப் புறநடைக்கு ஏற்பப் பொதுவிதிக்குப் பொருந்தாது தொக்கு நின்றது.

எனவே எழுத்தியல் முதலான ஐந்து இயல்களில் கூறப்படாத சொற்களுக்கு உரிய விதியை இப்புறனடையால் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாம்.

Post a Comment

0 Comments