சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்காப்பியம். கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே காரணமாக இருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு. ஐம்பெருங்காப்பியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்புடையது. கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது.

நூல் அமைப்பு

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்  ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. புகார்க் காண்டம் மங்கல வாழ்த்துப் பாடல் தொடங்கி நாடுகாண் காதை முடிய 10 காதைகளையும், மதுரைக்காண்டம் காடுகாண்காதை தொடங்கி கட்டுரை காதை முடிய 13 காதைகளையும், வஞ்சிக்காண்டம்  குன்றக்குரவை என்ற தலைப்பில் தொடங்கி வரந்தரு காதை முடிய 7 காதைகளையும் கொண்டு மொத்தம் 30 காதைகளைக் கொண்டு விளங்குகிறது.

நூல் சிறப்பு

இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட நூல்.

காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியம்.

காவிரி, வைகை முதலான ஆறுகளும், புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வர்ணிக்கப்பட்டுள்ளன.

அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும்.

சிறப்புப் பெயர்கள்

ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும்,

இயல், இசை ,நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் காணப்படுவதால் “முத்தமிழ்க் காப்பியம்” என்றும்,

புதுமைமிகு கருத்துகள் பல கொண்டதால் “புரட்சிக் காப்பியம்” என்றும்,

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமை பேசுவதால் “மூவேந்தர் காப்பியம்” என்றும்,

அக்காலத் தமிழக மக்களின் வரலாற்றை அறியும் கருவுவூலமாக விளங்குவதால் “வரலாற்றுக் காப்பியம்“ என்றும் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது.

·“உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள்” எனவும் குறிக்கப்பெறுகிறது.

காப்பியத்தின் கதை

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனால் மன்னின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். சினம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள். பின் சேரநாடு சென்று 14 நாட்கள் மலையில் தவமிருந்து கோவலனோடு சேர்ந்தாள்.

ஊர்காண் காதை

புறஞ்சேரியில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது.

ஊர்காண் காதை

மதுரை துயில் எழுகின்றது

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மதுரையில் நுழைந்தனர். மதுரையின் புறப்பகுதியில் சோலைகள், நீரோடைகள், வயல்கள் ஆகியவற்றில் வாழும்  பறவைகள் தன் உறக்கத்தில் இருந்து எழுந்து உற்சாகமாக ஒலி எழுப்பின. வைகறைப் பொழுதில் நீர் நிறைந்த குளத்தில் உள்ள தாமரை மலர்களின் மொட்டுக்களை இதழ்விரியச் செய்தான் கதிரவன். பகை அரசர்களை வெற்றி கொண்ட பாண்டியனது புகழ், மதுரை நகரைத் துயில் எழுப்பியது.

முரசுகள் முழங்கின

நெற்றிக் கண் கொண்ட சிவபெருமானின் கோவில், கருடச் சேவலைக் கொடியாகக் கொண்ட திருமாலின் கோயில், வெற்றி தரும் கலப்பையைப் படையாக ஏந்திய பலராமன் கோயில், கோழிச் சேவலைக் கொடியாக உடைய முருகன் கோவில், அறநெறிகள் விளங்கும் முனிவர்களின் தவப்பள்ளிகள், வீர நெறியைப் போற்றும் அரசரின் அரண்மனை ஆகியவை மதுரையில் இருந்தன. அங்கே அதிகாலை நேரத்தில் தூய வெண்மையான சங்குடன், கொடை முரசு, வெற்றி முரசு, நியாய முரசு என்னும் மூன்று வகைப்பட்ட முரசுகளும் சேர்ந்து ஒலி எழுப்பிக் காலை நேரத்தை அறிவித்தன.

கண்ணகியின் பாதுகாப்பு

தவத்தில் இருந்த கவுந்தியடிகளைக் கோவலன் கைதொழுது வணங்கினான். “அன்னையே! நான் இதுநாள் வரையிலும் நல்வழியைக் காணாது தீய வழியில் சென்றவன். கண்ணகி புதிய இடத்தில் வந்தமையாலும், பயணம் செய்த களைப்பாலும் மெலிந்துள்ளாள். நான் மதுரை நகருக்குள் சென்று மன்னனுக்கு நெருங்கிய வணிகர்களிடம் பேசி என்னுடைய நிலையைத் தெரிவித்து வரும் வரையில் அவளைத் தங்கள் பாதுகாப்பில் வைத்துச் செல்ல விரும்புகிறேன். இதில் தங்களுக்கு ஏதேனும் இடையூறு உள்ளதோ?” என்று பணிவோடு வினவினான்.

கவுந்தியடிகளின் அறிவுரை

“முன்பு தவம் என்னும் அறத்திலிருந்து தவறிய காரணத்தால் காதல் மனைவி கண்ணகியோடு தனியாகப் பெரும் துன்பம் அடைந்தவனே! வினை வலிமையானது. அதன் பயனை தவறாது நமக்குக் கொடுத்து விடும் என்பதை உணர்ந்து பாவச் செய்களைக் கைவிடுவாயாக!

அறநெறியில் வாழ்பவர்கள், நன்மையை எத்துணை அளவு கூறினாலும், மன உறுதியில்லாத மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆயினும் அவர்கள் செய்த பாவத்தின் பயனாகத் துன்பம் வரும்போது பெரிதும் வருந்துகின்றார்கள். கற்றறிந்த அறிவுடையவர்கள் ஒரு நாளும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.

பெண்களைப் பிரியும்போது ஏற்படும் துயரமும், அவர்களைச் சேரும்போது ஏற்படும் துன்பமும், மன்மதன் வருத்தும் துன்பமும், பெண்களைச் சேர்ந்து வாழ்பவர்க்கு என்றும் இயல்பான ஒன்று. ஆனால் ஒப்பற்ற தனிவாழ்க்கை வாழும் உறுதி உடையவர்களுக்கு இவை அனைத்தும் ஒருபோதும் இல்லை.

இந்த உலகில் பெண்களுக்கு உணவும் மட்டுமே முக்கியமான பொருள் என்று கருதும் அறிவற்றவர்கள் அளவற்ற துன்பத்தையே முடிவில் காண்பார்கள். காமத்தை மட்டுமே பற்றிக் கொண்டு காதலால் மூழ்கிக் கரைசேர முடியாத துன்பத்தை அடைவார்கள். இன்று மட்டுமல்ல. இந்த அவல நிலை தொன்று தொட்டு வருகின்ற பழைமையுடையது” என்று கவுந்தியடிகள் கோவலனிடம் கூறினார்.

கோவலனைத் தேற்றி வழி அனுப்பினார் கவுந்தியடிகள்

தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வரத்தால் இராமபிரான் தன் மனைவியோடு கானகம் சென்றான். பின்னர் சீதாதேவியின் பிரிவுத் துன்பம் தாங்காது இராமபிரானும் வருந்தினான். அத்தகைய பிரிவுத் துன்பத்திற்குக் காரணமானவன் வேதங்களைப் படைத்த நான்முகனைத் தோற்றுவித்த திருமால் என்பதும் அறிவாய் அல்லவா?

புட்கரனோடு சூதாடி நாட்டை இழந்த நளன் தன் மனைவி தமயந்தியோடு கானகம் சென்றதும், பின்னர் அவளையும் பிரிந்து, தான் மட்டும் தனித்து வாழ்ந்தமையும் தீவினையே ஆகும். அதில் தமயந்தியின் பிழை என்று எதுவும் இல்லை.  இத்தகைய துன்பத்தைக் கொள்ளாது நீ உன்னுடைய அன்பு மனைவியுடன் உள்ளாய். ஆதலால் வருந்த வேண்டாம். மதுரை நகருக்குச் சென்று வருவாயாக” என்று தன்னிடம் வருந்தி நின்ற கோவலனைத் தேற்றி வழி அனுப்பினார் கவுந்தியடிகள்.

மதுரை நகருக்குள் சென்றான் கோவலன்

கவுந்தியடிகள் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கோவலன், மனம் மகிழ்ந்து, காவல் மிக்க வேலியையும், அகன்ற அகழியையும் கடந்து நகரத்தின் வீதியை அடைந்தான். யானைகள் செல்லும் பெருவீதியில் தன்னைப் பிறர் காணதவாறு மறைந்து சென்ற கோவலன், காவலர்களான யவன வீரர்கள் ஐயப்படாதவாறு செல்லலானான் அப்போது மேல் காற்று வீச மதிலின் மீது பொருத்தப்பட்ட கொடிகள் அசைந்து ஆடின. பொது மகளிர் தாம் விரும்பிய ஆடவர்களோடு வைகையின் நீர்த்துறையில் ஆடி மகிழ்ந்தனர்.  

மகளிரின் விளையாட்டும் மாலை நேரத் தோற்றமும்

முல்லை, செங்குவளை, நெய்தல் மலர் ஆகியவற்றைக் கூந்தலில் சூடியும், மல்லிகையும் செங்கழுநீர்ப் பூக்களும் சேரத் தொடுத்த மாலையுடன் கொற்கைத் துறையில் விளைந்த முத்துக்களை மாலையாக்கிப் பொதிய மலையில் இருந்து தருவிக்கப்பட்ட சந்தனக் குழம்பைப் பூசிய பொற்கொடி போலும் இடையுடைய மாதர்கள் சோலையில் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் அந்திப் பொழுது வர அப்பெண்கள் தம்மை அலங்காரம் செய்து கொண்டவர்களாய்த் தமது கணவன்மார்களோடு நிலா முற்றத்தில் மகிழ்ந்து விளங்கினர்.

கார்கால அழகு

சிவந்த பட்டாடை உடுத்திக் கூந்தலில் வெட்பாலைப் பூவைச் சூடிக் குறிஞ்சி மலரையும் தரித்துக் குங்குமக் குழம்பை மார்பில் பூசிப் பவழமாலை திகழ மதுரையில் கார்காலம் என்னும் அரசன் வாடைக்காற்றோடு வலம் வரத் தொடங்கினான்.

முன்பனிக்காலம்

கார்காலத்தைத் தொடர்ந்து குளிர்காலம் தொடங்க, அகில் கட்டையை எரித்து அதில் எழுந்த நெருப்பைச் சட்டியில் இட்டுக் குளிர்காயும் மகளிர், வாசனைக் குழம்பை மார்பில் பூசிக் கொண்டு, தம் கணவரோடு கூடி மகிழ்வார்கள். குளிர் மிகுதியால் சாளரங்கள் மூடப்பட்ட இக்குளிர் காலத்தை ஒட்டி முன்பனிக்காலம் தோன்றும். அப்போது ஆடவரும் மகளிரும் முற்றத்தில் அமர்ந்து இளவெயிலில் காய்வர். சூரியன் மிதுனராசிக்குப் பெயர்வதால் இக்காலத்தில் மழை வளமும் குறையும்.

பின்பனிக்காலம்

         முன்பனிக் காலம் கழிந்த பின்னர் பெருங்கடலில் உள்ள மரக்கலங்கள் சோழ நாட்டின் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியில் இறக்கப்பட்ட கப்பப் பொருள்களாகிய அகில், வண்ணப்பட்டாடை, சந்தனம், நறுமணப் பொருள், கற்பூரம் ஆகியவற்றோடு மணம் கமழ மதுரையை வந்தடையும். அப்போது காதல் நோயைத் தரும் மன்மதனுக்கு விழா எடுக்கும் காலமாகிய பங்குனி மாதம் வந்துவிடும். அந்நிலையில் பனி மறைந்து போகும்.

கோடைக் காலம்

         அப்போது மாதவிக் கொடியானது இனிது பூத்துக் குலுங்கி மணம் வீசும். பொதியைத் தென்றல் காற்று மதுரைக்குள் புகுந்து மகிழச் செய்யும். இது பெண்கள் தத்தமது கணவரோடு மகிழ்ந்து இன்புற்றிற்கும் காலம் ஆகும். யானைக்கன்றுகளின் கூட்டத்தோடு வரும் ஆண் யானைகள் அஞ்சுமாறு மலைமுகட்டில் உள்ள காடுகள் தீப்பற்றி எரிய வெப்பம் மிக்க மதுரையில் அக்கோடை காலம் முடிவடையும் தருவாயில் விளங்கிற்று.

மகளிர் மகிழ்தல்

         பலவகையான பொருள்களை ஏற்றிச் செல்லும் வண்டியும், பல்லக்கும், மணிகள் இழைக்கப் பெற்ற கட்டிலும், வெண் சாமரமும், பொன்னால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டியும், கூர்மையான வாளும், அரசன் வெகுமதியாகக் கொடுக்க அவற்றைப் பெற்று மகிழ்ந்த மகளிர் சோலைகளில் விளையாடி மகிழ்ந்தார்கள். ஏவல் மகளிர் பொற்கிண்ணத்தில் தேனைக் கொண்டு வந்து தர, அதனைப் பருகிய பெண்கள் மயங்கிய நிலையில் இருக்க, அவர்கள் அணிந்துள்ள மலர் மாலைகளில் வண்டுகள் மொய்த்து மயங்கும். அப்பெண்கள் தாம் தம் கணவரோடு கூடியிருந்த காலத்தில் நிகழ்ந்த உரைகளை எண்ணியவராய் மகிழ்ந்திருக்க, நெஞ்சு முதலாகிய எட்டு இடங்களில் (தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம்) பெற்ற இன்பத்தால் கண்கள் சுழலவும், நெற்றியில் வியர்வை தோன்றவும், மீண்டும் தம் கணவரால் பெறவிருக்கும் இன்பத்திற்குக் காத்திருப்பார்கள். இத்தகைய தன்மையுடையது மதுரையின் அரச வீதியாகும்.

நடன மாதர்களின் தன்மை

         சுட்ட செங்கற்களைச் சுமக்கும் தண்டனை பெறாத உயர்ந்த குடிமக்களும், முடி மன்னர்களும் போற்றப்படுமாறு நடன மாதர்கள் விளங்கினார்கள். அவர்கள் அரசர்களின் முன் ஆடும் வகையையும், ஏனையோர் முன்னே நின்று ஆடும் வகையையும் அறிந்தவர்களாவர். ஆடல் பாடல், தாளவகை, இசைக்கருவிகளின் தன்மை ஆகியவற்றை அறிந்த இவர்கள் இருத்தல், இயங்கல், நிற்றல், கிடத்தல் ஆகிய நான்கு வகையான ஆடல் வகைகளிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழு வகையான சுரங்களையும் அறிந்தவர்கள்.

இவர்களில் தலைக்கோல் பட்டம் பெற்றவர்களும், பின்பாட்டு இசைப்பவர்களும், வாத்தியம் இசைப்பவர்களும், நடனம் தொடங்குவதற்கு முன்பு பாடுபவரும் இடையிடையே பாடுபவரும் என நான்கு வகையினரும் உண்டு. மேலும், ஒவ்வொரு நாளும் ஆயிரத்து எட்டுக் கழஞ்சு பொன் பெறுவரும் உண்டு. தவச்சீலர்களாக இருந்தாலும் வாசமலரில் தேனுண்டு மயங்கும் வண்டு போன்று இத்தகைய ஆடல் மகளிர்பால் மயங்குபவரும் உண்டு. இவர்கள் கிளியின் மழலை பொழியைத் தோற்கச் செய்பவர்களாய் அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ந்தவர்களாய் இருபெரும் வீதிகளில் விளங்கினர்.

கடைவீதி

மூடுவண்டி, இரண்டு சக்கர வண்டிகள், தேர்த்தாமரைத்தட்டு, உடல்கவசம்,  மணிகள் பதித்த அங்குசம், தோலால் செய்த தாளம், அரைப்பட்டிகை, வளைதடி, வெண்சாமிரம், சித்திரச் சீலை, குத்துக்கோல், செம்பு, வெண்கலப் பொருள், கயிறுவகை, சுருக்கு அரிவாள், தந்தத்தால் ஆன பொருள்கள், வாசனைப்புகை, வண்ணச் சாந்து என்னுமாறு பலவகையான பொருள்கள் கடை வீதியில் இருந்தன.

நவரத்தின மணிகள்

காசுபாதம், அழுக்கு, புள்ளி, இரேகை எனப்படும் நான்கு வகையான குறைகள் நீங்கியனவும், நல்ல நிறமும் ஒளியும் கூடிய வைரக் கற்களும், நீரோட்டம், கருமை என்னும் குற்றங்கள் இல்லாத பச்சை மரகதக் கற்களும், குறையில்லாத பதுமம், நீலம், விந்தம், படிதம் எனப்படும் நான்கு வகையான மாணிக்கங்களும், பூச நட்டசத்திரம் போலவும், பூனைக் கண் போலவும், பொன் ரேகை போலவும் தெரியும் புஷ்பராகக் கற்களும், தீது அகன்ற சூரிய ஒளியும் தேனின் நிறமும் உடைய வைடூரியங்களும், இருள் தெளிந்தது போன்று ஒளிவிடும் நீலமணிக் கற்களும், மஞ்சளும் சிவப்பும் கலந்த கோமேதகக் கற்களும் அங்கு விளங்கின.

மேலும், ஒரே கல்லாக இருப்பினும், ஐந்து விதமான ஒளி வீசும் மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் என்னும் மணிகளும் அக்கடை வீதியில் விளங்கின. காற்று, மணி, கல், நீர் ஆகியவற்றால் உண்டான அழுக்குகள் நீக்கப் பெற்ற வெண்மையும் சிவப்பும் உள்ள முத்துக்களும், வளைவு, துளை, முறுக்கு என்னும் குற்றங்கள் இல்லாத பவளங்களும் ஆங்கு விளங்கின. அத்தகைய கடைத்தெரு பகைவரின் அச்சம் இன்றி இனிது விளங்கியது.

கோவலன் புறஞ்சேரியை அடைதல்

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னுமாறு விளங்கும் உயர்ந்த வகையான பொன் வாணிபம் செய்யும் வணிகர்கள் நன்கு விளம்பரப்படுத்தும் வகையில் உரிய கொடிகளைக் கட்டியிருந்தார்கள். பருத்தி, எலிமயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட துகிற்கடைகள் விளங்கின. பொருள்களை நிறுத்துக் கொடுக்கத் துலாக் கோலும், முகந்து கொடுக்க மரக்கால், படி போன்றனவும் ஆங்கு விளங்கின. மேலும் மிளகுப் பொதிகளும் தானியங்களும் தனித்தனியே விளங்கின.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வருணத்தினரும் வாழும் வீதிகளும், முச்சந்தி நாற்சந்திகளும், கோயில்கள், சந்துகள், குறுந்தெருக்கள், மன்றங்கள் ஆகியனவும் விளங்கின. சூரிய ஒளியை மறைக்கும் வண்ணக் கொடிகள் பல உயர்ந்து விளங்கின. இவற்றைக் கண்டு மகிழ்ந்த கோவலன் மீண்டும் புறஞ்சேரியைச் சென்றடைந்தான்.



Content Source: The content in this post is adapted from https://arangameena.blogspot.com. All rights to the original work belong to the author.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Need help? Chat on WhatsApp