Ad Code

If you need any help please contact us via WhatsApp!

நன்றி நவிலல்

நன்றி நவிலல்

நன்றி நவில்வதைப் பற்றியுங்கூட ஒருவர் கற்றுக் கொள்ளுதல் வேண்டுமா என்று சிலர் கருதலாம். அவ்வாறு கருதுதல் தவறு. நன்றி நவில்வோரிடம் பல குறைபாடுகள் காணப்படுவதால்,நன்றி நவில்வதைக் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியமாகிறது.

நன்றி நவிலல், கூட்டத்தின் கடைசிக் கட்டம். அவையினர், "இனி என்ன வேலை இருக்கிறது? விரைவாக வீட்டுக்குப் போகலாம்" என்று எழுந்திருப்பர். மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 9.30 மணிக்கு முடிந்திருக்கும். சிலர் 'பஸ்' அல்லது 'ரயில்' ஏறிப் போக 'வேண்டியவர்களாக இருப்பர். அப்படிப் போக வேண்டுபவர்கள் எப்படி எழுந்து போகாமல் அமர்ந்திருக்கக் கூடும்? ஒருவர் இருவர் எழுந்ததும், எல்லோரும் எழுந்து விடுவர். இந்நிலையில் செயலாளர் மேடையின் அருகில் இருந்து, தலைவர் முடிவுரை முடிந்ததும் மேடையேறி, "பெரியோர்களே, தாய்மார்களே, நன்றி நவிலும் கடமையாற்ற நிற்கிறேன்" என்று கூறிப் பேச்சை வளர்த்துக் கொண்டே போதல் கூடாது; இரு நிமிடங்களுக்குள் கடமையை முடித்துவிட வேண்டும்.

முதன்மையாகத் தலைவர்க்கும் பின்னர் முறையாக முதலில் பேசியவர்க்கும், இரண்டாவது பேசியவர்க்கும், மூன்றாவது பேசியவர்க்கும், பின்பு இடம் உதவியவர்க்கும் மற்றும் உதவி செய்தவர்களுக்கும் இறுதியாக அன்புகூர்ந்து வந்து கூட்டத்தைச் சிறப்பித்த பெருமக்களுக்கும் நன்றி நவில்தல் இன்று காணும் வழக்கம். தலைவர் முடிவுரை தொடங்கும்போதே, நன்றி கூற இருப்பவர் மேடையின் அருகில் நின்று கொண்டிருந்து, தலைவர் முடிவுரை முடிந்ததும், மேடையேறி விரைவில் பிழையின்றி நன் முறையில் நன்றி கூறி, மேடையைவிட்டு இறங்க வேண்டும்." அவரை விட்டுவிட்டனையே, இவரை விட்டுவிட்டனையே" என்று பிறர் குறைகூறாவண்ணம் நன்றியுரை நடைபெறவேண்டும். இதற்கு நினைவாற்றல் இன்றியமையாதது. இன்றேல், கையில் பெயர்களை எழுதிய ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு மறவாது நன்றி கூறும் பணியைத் தட்டுத்தடங்கல் இன்றி இனிதாக முடிக்க வேண்டும்.

உதவி செய்தவர்களுக்கு நன்றி கூற மறந்துவிட்டால், அவர்களுடைய மனம் புண்படும். சிலர் வெளிப்படையாக அக்குறையைக் கூறாவிடினும் உள்ளத்தில் வருந்தாமல் இரார். எனவே, விழிப்புடன் பொறுப்போடு நன்றி கூறும் செயலாளர், நன்றிக்குரியவர் அத்தனை பேர்க்கும். காலத்தை வீணாக்காது சுருக்கமாக, ஆனால் தெளிவாக. கூட்டம் கலைவதற்குள் நன்றி நவில வேண்டும்.

நன்றி கூறுதலைச் சொற்பெருக்காக்காதீர்கள்

பேச்சுத் திறமைமிக்கவராக இருத்தலால் செயலாளர் நன்றி நவில்தலைச் சொற்பொழிவாக்குதல் தவறு. எத்தகைய பெரும் பேச்சாளராயினும் நன்றி நவில்தலை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் நிகழ்த்தலாகாது. செயலாளர் சிலர், பேச்சாளர்கள், தலைவர் ஆகிய இவர்களுடைய பேச்சுகளின் கருத்துகளைத் தொகுத்துக்கூறி 'விமர்சனம்' செய்து, அவர்கள் கூறியனவற்றிக்கு மேலாக வேறு கருத்துகளையும் சொல்லி நன்றி நவில்வதுண்டு. இஃது அநாகரிகமான செயலாகும். அறிஞர்களாயினும் பெரும் பேச்சாளர்களாயினும் ஒருவர் செயலாளராக அல்லது செயலாளர் பிரதிநிதியாக முன்வந்து நன்றி கூறுங்காலத்துத் தம் பேச்சுத் திறமையைக் காண்பிக்கும் முகத்தான் சொற்பெருக்காற்றுதல் தவறான முறையாகும்.

ஒருவேளை பேச்சாளரோ, தலைவரோ தம் கழகத்தைப் பற்றியோ, நிலையத்தைக் குறித்தோ தவறான கருத்தை வெளியிட்டால், அப்போது நன்றி கூறுவோர். அத்தவறான கருத்தை மாற்ற இரண்டொரு வாக்கியங்களால் திருத்தத்தை நன்முறையில் எடுத்துக்கூறி, அடுத்து நன்றி நவிலுதல் முறையாகும். அப்படிச் செய்வதில் தவறில்லை. கேட்போர் தவறான கருத்துடன் போகலாகாது என்பதற்காகச் செய்வது அது. மற்றவகையில் எவரும் எக்காரணம் பற்றியும் நன்றி நவில்தலை நீட்டி விடுதலாகாது.

நன்றாயிராவிடினும் நன்முறையில் நன்றி கூறுக.

சில சமயங்களில் பேச்சு நன்றாயிராமல் இருக்கலாம். நன்றாகப் பேசுபவர் என்று கருதப்பட்டு அழைக்கப்பட்ட பேச்சாளர் நன்றாகச் சொற்பொழிவாற்றாமல் இருக்கலாம். என்றாலும், அவர் அழைப்பிற்கு இணங்கி வந்து சொற்பொழிவாற்றியதற்காக நன்முறையிலுங்கூட, "நாங்கள் அவர் பேச்சை மிகவும் சிறப்பாக எதிர்பார்த்தோம்; அப்படி இல்லாததற்கு வருந்துகிறோம்" என்று சொல்லி நன்றி கூறலாகாது. இப்படிச் செய்தால் வந்தவர் மனம் புண்படும். பேச்சாளர்கள் பேச வரமாட்டார்கள். "நம் வேண்டுகோளுக்கு இசைந்து இங்கு வந்து சொற்பொழிவாற்றியதற்கு நம்முடைய அன்பு கலந்த நன்றி உரித்தாகுக" என்று சொல்லி நன்றி நவிலலாம்."

கற்பனைப் புகழ்ச்சி கூடாது

செயலாளர் சிலர், தலைவர், பேச்சாளர் இவர்களை வானளாவப் புகழ்ந்து, இல்லாததையும் ஏற்றிப் பொருந்தாத முறையில் கற்பனையாகத் திறமைகளைப் பாராட்டி நன்றி கூறுதல், கேட்பவர்களுக்குச் செயலாளரைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ

வஞ்சப் புகழ்ச்சியும் கூடாது

பேச்சாளர் மீது வஞ்சம் தீர்க்கும் வகையில் செயலாளர் சிலர் வஞ்சப் புகழ்ச்சியணியைத் துணைக் கொண்டு நன்றி கூறும் முகத்தான் தாக்குவதுமுண்டு; தாக்காவிடினும் வெறுப்புத் தோன்றும் முறையில் நன்றி நவில்வதுண்டு. ஒருநாளும் அப்படிச் செய்தலாகாது.

அறிவிக்கவேண்டுவதைத் தெரிவிக்கலாம்

அடுத்த நாள் நிகழ்ச்சியைக் குறித்துக் கூட்டத்தில் அறிவிக்கவேண்டுமாயின், அதை முன்னமே அறிவித்துப் பின்பு நன்றி நவிலவேண்டும்.

தொகுப்புரை

எந்த வகையிலும் எத்தகைய அறிஞராயினும் 'எப்படிப்பட்ட பெரும் பேச்சாளராயினும் நன்றி கூறுங்கால், எவரும் தலைவர், பேச்சாளர் இவர்களுடைய பேச்சுக்களைக் குறித்து ஆராய்ச்சி நிகழ்த்தாமலும், சொற்பொழிவு செய்யாமலும், பாராட்டி, மிகச் சுருங்கிய அளவில் கேட்போர் வெறுப்புற்று எழுந்து போகாதவாறு கூட்டம் கலைவதற்குள் சுவையுடன், எவ்வாற்றானும் மிகாமல் நன்றி நவில்தல் முறை.

ஆங்கிலக் கழகங்களில் இரண்டு நிமிடங்களுக்குள்ளே நன்றி கூறக் காணலாம். பெரும் பேச்சாளர் பேசும் அரசியல் கூட்டங்களில் "பேசிய அனைவருக்கும் வந்து சிறப்பித்த எல்லோருக்கும் உளமார்ந்த நன்றி" என்று கூறுவதோடு நன்றி நவில்வது முடியவேண்டும். இல்லா விட்டால் நன்றி நவில்தலுக்கு மதிப்பிராது.

பெரும்பேச்சாளர்கள் பேச்சுக்களையன்றி மற்றவர்கள் பேச்சுகளைக் கேட்க அரசியல் கூட்டங்களில் மக்கள் விரும்புவதில்லை. ஆதலால், நன்றி கூறுவோர் தம் மானத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பினால் ½ நிமிடத்தில் நன்றி நவில்தலே சிறப்புடையது. அரசியல் பெரும் பேச்சாளர்கள் சுருக்கமான நன்றியைப்பற்றி வருந்திக் கவலை கொள்ளமாட்டார்கள்.

கழகச் செயலாளர்கள், கேட்போர் மனநிலையறிந்து நேரமறிந்து நன்றி நவின்று கூட்டங்களை இனிது முடிக்கவும். கேட்போர் நல்லெண்ணத்துடன் வீட்டுக்குத் திரும்பிப் போகுமாறு செய்யவும் பயிற்சி பெறுதல் வேண்டும்.

Post a Comment

0 Comments